பெரியவர்கள்
உரும்பிராய் என்று சொன்னால் கற்றோர் உலகில் பஞ்சலிங்கம் குடும்பத்தினர் பற்றிப் பேசப்டுவது வழக்கம். அவர்களது கல்வி அறிவும் தேச சேவையுமே காரணம் ஆகலாம்.
செல்லப்பா மீனாட்சிப்பிள்ளை தம்பதியினர் பெற்றெடுத்த ஆண் பிள்ளைகள் ஐவர். சிரேட்டரான திரு பஞ்சலிங்கம் அவர்கள் சிறந்த வைத்தியர். சட்டத்துறையில் முன்னரே பிரபல்யம் பெற்றவர் திரு செ. நாகலிங்கம் அவர்கள். நீதியரசராக இருந்த இவர் சிலகாலம் பதில் தேசாதிபதியாகவும் கடமை புரிந்தவர். இலங்கைத் தமிழரில் இலங்கையின் தேசாதிபதியாக இருந்த பெருமைக்கு உரிய ஒரேயொரு தமிழர் திரு செ. நாகலிங்கம் அவர்களேயாவர்.
மூன்றாமவரான திரு. சுந்தரலிங்கம் அவர்கள் இலங்கைப்பல்கழகத்தில் புகழ்பூத்த கணிதப் பேராசிரியராக விளங்கியவர் இலங்கை, இந்தியா சிவில் சேவை பரீட்சைகளிற் சித்தியடைந்தவர் சட்ட அறிஞர், வவுனியாத்தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும், சிலகாலம் வர்த்தக அமைச்சராகவும் இருந்ததுடன் இவர் விவசாய விருத்தியிலும் அக்கறை கொண்டிருந்தார்.
அடுத்தவரான திரு தியாகலிங்கம் அவர்கள் சட்டத்துறையில் அதிமேன்னை பெற்றிருந்தார். கியு. ஸி என்ற அந்தஸ்தையும் அடைந்திருந்தவர். முருகபக்தரான இவர் சமய, சமூகத்துறைக்குத் தம்மாலான தொண்டுகளைப் புரிந்துள்ளார். .
கனிட்டரான திரு. அமிர்தலிங்கம் அவர்கள் சிறந்த கல்விமான் எனப் பாராடப்பட்டவர். கலாநிதிப் பட்டம் பெற்றவர் மீன்பிடி இலாகாவில் உயர் உத்தியோகம் வகித்தவர் பிற்காலத்தில் இங்கிலாந்துக்குச் சென்று அங்கு வாழ்ந்தவர்.
தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரு வழக்கில் நீதிபதியாகப் பணிபுரிந்தவர் திரு. செ. நாகலிங்கம் அவர்கள். வழக்காளி எதிரிகள் சார்பில் திரு. செ. சுந்தரலிங்கம் அவர்கள் ஒருபுறமாகவும், திரு. செ. தியாகலிங்கம் அவர்கள் மறுபுறமாகவும் ஆஜராகி வாதிட்டார்கள். அண்ணன் நீதிபதியாக இருந்த அதே வழக்கில் தம்பிமாரான சுந்தரலிங்கம் அவர்களும் தியாகலிங்கம் அவர்களும் நியாயவாதிகளாக ஏற்பட்டு மிகவும் திறமையாகச் சட்டஅறிஞர் உலகம் வியக்கும் வண்ணம் தங்கள் தங்கள் கட்சிக்காரர் பொருட்டுப் பேசினார்கள்.
நீதிபதியும், நியாயவாதிகளான தம்பியர் இருவரும் நீதிஸ்தலத்தில் ஒரே வழக்கில் ஒரே காலத்தில் சந்தித்த சந்திப்பு நீதித் துறை உலகில் ஓர் அப+ர்வ சந்திப்பு. இந்த அப+ர்வ சந்திப்புக் குறித்து அப்பொழுது பத்திரிகைகள் மிகவும் பாராட்டி எழுதின.
திருமணம் காரணமாக இவ்வூருடன் தொடர்பு கொண்டவர்களான பிரபல்யம் வாய்ந்த சட்டமேதைகளும் உளர். திரு தம்பு துரைச்சாமி அவர்களும், மூதவை உறுப்பினராக இருந்த திரு எஸ் நடேசன் கியு.ஸி அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்களும் இவ்வூருடன் தொடர்புபட்டவர்.
கருணாகரப்பிள்ளையார் ஆதீனத்தைச் சேர்ந்தவரான சிவஸ்ரீ அ. வைத்தீஸ்வரக் குருக்கள் (சின்னையர்) கற்பக விநாயகர் ஆதீனத்தைச் சேர்ந்தவர்களான சிவஸ்ரீ இ. பரமசாமிக் குருக்கள் சிவஸ்ரீ. கு வேதக்குட்டிக் குருக்கள், பண்ணிசைச் செல்வர் சிவஸ்ரீ. ச. முத்துக்குமார சுவாமிக் குருக்கள் ஞானவைரவர் சிவஸ்ரீ பொ. கற்தையாக் குருக்கள் உள்ளிட்டவர்கள் தாம் தாம் சார்ந்த சிவாலயங்கள் வாயிலாகவும், ஒன்று சேர்ந்தும் ஆற்றிய சைவப் பணிகள் மகத்தானவை விசேடமாக மஹோற்சவங்கள், சைவப் பிரசங்கங்கள், புராண படனங்கள் காலத்துக்குக் காலம் சிறப்பாக நடைபெற உழைத்த பெருமக்கள் இவர்கள். இவர்களது புகழ் இவர்கள் காலத்திலேயே எங்கும் பரவியிருந்தது. இவர்கள் மறைந்த பொழுதிலும் இவர்கள் பணிகளோ என்றும் மறக்கவோ மறைக்கவோ முடியாதவை.
மேலும் இக்கராமத்தில் வைத்திய கலாநிதிகள், பொறியியலாளர்கள், ஆசிரியர்கள், அரசாங்க அதிபர்கள், கமக்காரர்கள், கைத்தொழிலாளர்கள், வணிகர்கள் என்றிவ்வாறு பலரும் வாழ்ந்தார்கள்ƒ வாழ்கின்றார்கள். கணக்காளர் உலகில் பலரது பாராட்டையும் பெற்றவரான திரு . மு பசுபதி அவர்களும் நூலாசிரியர் உலகில் தமக்கென்றே ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவரான திரு. செ. தனவாலசிங்கம் அவர்களும் இவ்வூர்ப் பிறந்தவர்களே அவர்கள் அமரத்துவம் அடைந்துவிட்டார்கள். அவர்கள் நாமங்கள் என்றும் நிலைத்து நிற்கும் இந்தக் கிராமத்தின் புகழுக்கு இன்னும் பலர் அச்சாணியாக இருந்தார்கள்.
‘திரைகடலோடியுந் திரவியத்தேடு” என்பது முதுமொழி. ஈழம்வாழ் தமிழர்களை விசேடமாக உரும்பிராயைச் சேர்ந்தவர்களை உத்தியோகநிமித்தம் அப்பொழுது மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகள் அழைத்துக் கௌரவம் செய்தன. இந்த நாடுகளில் மக்கள் உழைத்த உழைப்பு, உரும்பிராயை வளப்படுத்தியது என்று துணிந்து கூறலாம். இப்பொழுது கல்வி தொழில் காரணங்களை முன்னிட்டு உலகின் பல பாகங்களிலும் இவ்வூர் மக்கள் பரந்திருக்கின்றனர்.
‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்பார்கள். மொழிப்பற்று, நாட்டுப் பற்றுக் காரணமாக முன்னின்று உழைத்தவர்கள் உழைக்கின்றவர்கள் பலர். ‘வீரசுதந்திரம் வேண்டி நின்றோர் பின்னர் வேறொன்று வேண்டுவரோ” என்றார் பாரதியார். நாட்டு விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்த வீரர்கள், வீராங்கனைகள் வாழ்ந்த-வாழ்கின்ற பதி இதுவாகும்.
|